எல்லாம் வல்ல எம்பெருமான் ஆரம்ப காலத்தில் கோவில் கொண்ட தலம் கல்லால் என்னும் கூழையன் கூண்டு என்ற இடமாகும். இவ்வூர் குறும்பூர் அருகே உள்ளது.

 

இக்கோவில் பெரிய கட்டிடங்களைக் கொண்டிருக்கவில்லை. இக்கோவிலை 60 வீட்டுக்காரர்கள் நிர்வாகம் செய்து வந்தார்கள். 60 வீடுகளும் கார்காத்த பிள்ளைமார்கள் நியமம் தவறாது பூஜைகள் செய்து வந்தவர்கள் மனதில் நஞ்சுபுகுந்து கொண்டது.

 

அந்த தலத்தில் கிடாரம் (பெரும்புதையல்) இருப்பதை யாரோ ஒரு மந்திரவாதி தெரிந்து கொண்டு அந்தப் பூசாரிகளிடம் கூறியிருக்கிறான். பணம், கிடாரம் என்ற ஆசை அவர்களை ஆட்டிப்படைத்தது. அதை எடுத்து அனுபவிக்க அவர்கள் உள்ளத்தில் ஆசைத்தீ புயலாக உருவாகி நெஞ்சில் கனன்று கொண்டிருந்தது.

 

இதை எடுக்கத்தக்கவர் யார் என அவர்கள் இரகசியமாக தேட  ஆரம்பித்தார்கள். அப்போது குறும்பூரைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவரைப் பற்றி தெரிந்து கொண்டார்கள். அவர் சித்தர், ஆகவே மந்திர தந்திரங்களில் சிறந்து விளங்கினார். ஞான திருஷ்டியும் பெற்றிருந்தார். ஜோதிடரை அணுகி மெதுவாகப் பேசி கோவிலுக்கு வந்து தரிசிக்கும்படி அழைத்தார்கள்.

 

ஜோதிடர் கோவிலுக்கு வந்து இறைவழிபாட்டில் ஈடுபட்டார். அப்போதுதான் அவருக்கு எதற்காக அழைத்துவரப்பட்டோம் என்ற விவரம் புரிந்தது. மெல்ல பூசாரிகள் கிடாரம் எடுக்க வேண்டிய விவரத்தைக் கூறினார்கள். ஜோதிடர் முதலில் மறுத்தார். ஆயினும் அந்த கிடாரம் வெளியே வரவேண்டிய காலகட்டம் நெருங்கிவிட்டது என்பதைப் புரிந்து கொண்டார். ஆகவே அரைமனதாக சம்மதம் கொடுத்தார்.

 

பூசாரிகள் அடுத்த கட்டவேலையில் ஈடுபட்டார்கள். ஜோதிடரை உடனடியாக மையோட்டம் பார்க்கச்சொல்லி வற்புறுத்தினர். வேறு வழியின்றி அவரும் பார்த்தார். அக்கோவிலையும், கிடாரத்தையும் 21 பரிவாரத்தேவதைகள் பாதுகாப்பது அப்போது அவருக்குப் புரிந்தது. ஆகவே பரிவாரத் தேவதைகள் எப்போது அந்த இடத்தை விட்டகலும் என்பதை ஞான திருஷ்டியாலும், மையோட்டத்தாலும் அறிந்தார்.

 

வழக்கமாக திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசி மாதம் நடைபெறும் திருவிழாவிற்கு 21 தேவதைகளில் சப்பாணி மாடனை மட்டும் காவலுக்கு வைத்துவிட்டு மற்ற தேவதைகள் திருவிழாவிற்கு சென்றுவிடும் என்பதை அறிந்தார். காவல்செய்யும் சப்பாணி மாடனை மந்திரத்தால் கட்டவேண்டும். அதற்கு சூல் பன்றி, சூல் ஆடு, நிறை சூலி ஆகிய மூன்று பலிகள் இடவேண்டும். திருச்செந்தூர் சென்ற தேவதைகள் திரும்புவதற்குள் கிடாரத்தை எடுத்துவிட வேண்டும் என்ற விவரங்களைக் கூறிச்சென்றார்.

 

அன்று அந்திக் கருக்கலில் ஒரு நிறைமாத சூலி அந்த ஊர் அருகே சென்று கொண்டிருந்தாள். அதைப் பார்த்த அவர்களுக்கு புதுத்தெம்பு வந்தது. அவளருகில் சென்று விசாரித்தனர். அவர் பக்கத்து ஊர் தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவள். பேறு காலத்திற்காகத் தாய் வீட்டிற்குச் செல்வதற்காகக் கூறினாள். அடடா, இந்த இரவு வேளையில் நிறைமாதப் பெண் தனியே போகக்கூடாது பேய், பிசாசு அடித்துவிடும். ஆகவே எங்கள் வீட்டில் தங்கிவிட்டு காலையில் செல்லலாம் வா என்று கூறி வற்புறுத்தினார்கள்.

 

அவளோ "அம்மா! நான் தாழ்ந்த ஜாதி, நீங்கள் உயர்ந்த ஜாதி. நான் இங்கே தங்குவது தகாது என் தாய் வீட்டிற்கே போய் விடுகிறேன்" என்று மறுத்தாள்.

 

ஆனால் அந்தப் பெண்களோ கள்ளத்தை மனதில் வைத்து வார்த்தைகளில் தேனாக, "பெண்ணே, நீயும் பெண், நாங்களும் பெண்கள் தானே! இப்படிப்பட்ட அகால நேரத்தில் ஜாதியைப் பற்றி எண்ணலாமா? இங்கே தங்கிவிட்டு நாளை காலையில் செல்லலாம். தயங்காதே! நாங்கள் உனக்குத் துணையாக இருக்கிறோம்" என்று நயவஞ்சகமாகப் பேசி அவளைத் தங்க வைத்தனர்.

 

அன்றிரவு பூஜை நடந்தது. அவர்கள் ஏற்பாட்டின்படி எல்லாம் நிறைவேறியது. பலி கொடுக்கும் வேளையில் ஜோதிடரை நோக்கி அந்தப் பெண் "ஏழேழு ஜென்மத்திற்கும் உனக்குப் பெண் வாரிசு தங்காது" என்று சாபமிட்டாள் (அது பலித்தது, அவரது பரம்பரையில் ஏழு தலைமுறையாக பெண் வாரிசு இல்லை. பின்னர் பூ.ந. வைத்தியலிங்கம் பூசாரி தலைமுறையிலிருந்து தான் பெண் வாரிசுகள் ஏற்பட்டன).

 

எல்லாம் முடிந்து கிடாரத்தை எடுத்து பங்கு வைத்தனர். ஜோதிடருக்கும் சேர்த்து 61 பங்கு வைத்து எடுத்துக் கொண்டனர். ஜோதிடர் தன் பங்கைக் கொண்டு செல்ல மனமின்றி கிடாரம் எடுத்த குழியில் தங்கத்தைப் போட்டு மூடிவிட்டார். பின்னர் சப்பாணி மாடசாமியைக் கட்டிய மந்திரக்கட்டை அவிழ்த்து விட்டார். உடனடியாக சப்பாணி மாடசாமி திருச்செந்தூர் சென்று நடந்த விவரங்களையும், ஜோதிடர் தன் பங்கை எடுத்து செல்லாததையும் கூறியது.

 

இருபத்தொரு தேவதைகளும் ஆவேசமாக திரும்பி வந்தன. 60 வீடுகளையும் வெளியே பூட்டிவிட்டு தீ வைத்துக் கொளுத்தின. 60 வீட்டார்களும் எரிந்து சாம்பலாயினர். அதில் ஒரு பெண் தன் தாய் வீட்டிற்கு பேரு காலத்திற்குச் சென்றிருந்ததால் அவளும், அவளுக்குப் பிறந்த ஆண் குழந்தையும் தப்பினர். அன்று முதல் அந்த வழி வழி வாரிசுகள் தான் அங்கு இருக்கிறார்கள்.

 

ஜோதிடருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் கர்ப்ப சித்தர். அவன் வேட்டை ஆடுவதில் பிரியம் உள்ளவன். ஜோதிடர் தன் மகனிடம் தென்திசைக்கு வேட்டையாடப் போகவேண்டாம் என்று கூறியிருந்தார். குறும்பூருக்குத் தென்திசையில் தான் கல்லால் உள்ளது. தன் மகன் அங்கு சென்றால் சாமிக்குற்றம் ஏற்படும் என்று அஞ்சியே அவனை தென்திசை செல்ல வேண்டாம் என்று தடுத்தார்.

ஆனால் விதி யாரை விட்டது. வேட்டைக்குச் சென்ற மற்ற திசைகளில் வேட்டை கிடைக்கததால் தன்னையும் அறியாமல் தென்திசைக்கு சென்றான். எதிர்பார்த்ததை விட அதிகமாக வேட்டை கிடைத்தது. மகிழ்ச்சியோடு வீடு திரும்பினான்.

 

 

மகன் என்றைக்கும் இல்லாத அளவிற்கு இன்று அதிக வேட்டையுடன் வருவதைக்கண்டு வியந்து என்ன காரணம் என்று கேட்டார். தென்திசைக்கு வேட்டைக்குச் சென்ற விவரத்தை மகன் கூறினான். ஜோதிடரின் மனம் கலங்கியது. அவர் பயந்தது போலவே அன்றிரவு மகனுக்கு காய்ச்சல் வந்தது. ஜோதிடர் மகனுக்கு திருநூறு மந்திரித்துப் பூசினார்.



அன்றிரவு மகனின் கனவில் இறைவன் தோன்றினார். நான் தென்திசையில் உள்ளேன். எனக்கு வந்து பூஜை செய் உன் உடல் நோய் தீரும் எனக்கூறினார். ஐயனே நீர் இருக்கும் இடம் எனக்குத் தெரியாதே என பாலகன் வினவினான். நீ தென்திசையில் நேற்று வேட்டையாடிய பகுதிக்கு வா, ஒரு கருடன் வானத்தில் மூன்று வளையமிட்டு பின் தரையில் ஓரிடத்தில் கொத்தும். அந்த இடத்தை தோண்டிப்பார் நான் அங்கு தான் இருக்கிறேன். எனக்கு பூஜை செய்ய நீ அதிக சிரமப்பட வேண்டாம். அபிஷேகம் செய்து நெல்பொறி வைத்து பூஜை செய்தால் போதும் என்று கூறி மறைந்தார்.


மறுநாள் காலை சித்தர் தந்தையாருக்குத் தெரியாமல் தென்திசை நோக்கிச் சென்றான். அங்கு இறைவன் கனவில் கூறியது போலவே ஒரு கருடன் மூன்று முறை சுற்றி வந்து தரையில் கொத்தியது. அந்த இடம்தான் இறைவன் குடிகொண்ட இடம். முன்னர் கிடாரம் எடுத்த பூசாரிகள் அழிக்கப்பட்டதால் கோவிலில் பூஜை நின்று விட்டது. மணல் தேரிப் பகுதியானதால் மண் மூடியிருந்தது.

 

கருடன் குறிப்பிட்ட இடத்தைத் தோண்டிப் பார்க்க இறைவன் திருவுருவம் அங்கே தோற்றமளித்தது. தான் கொண்டுவந்திருந்த நீரால் நீராட்டி நெல் பொறி வைத்து பூஜை செய்தான். நாளடைவில் அவன் நோயும் குணமாகியது.

காலப்போக்கில் பஞ்சம் ஏற்படவே இறைவனை ஓர் ஒலைப்பெட்டியில் வைத்து ஊர் ஊராகச் சென்று யாசகம் பெற்று எளிமையான முறையில் பூஜை செய்து வந்தார். சிவலார்குளம் (ஆலடிப்பட்டி கிழக்கு) என்ற ஊரின் அருகில் உள்ள மலையில் வந்து சித்தர் தங்கினார். இறைவனை நீராட்டவும், தன் தாகத்தைத் தீர்க்கவும் தண்ணீர் தேவைப்பட்டது. சித்தர் தன் கையிலிருந்த வேலால் தரையில் குத்தினார். அந்த இடத்தில் ஊற்று பொத்துக் கொண்டு வந்தது. ஆகவே அந்த இடத்திற்கு எச்சி-நா-ஊற்று என்று பெயர் வந்தது.

 

பின்னர் சிவலார்குளம் கண்மாய் அருகேயுள்ள நெக்கட்டை என்ற மரத்தடியில் வைத்து சிவலார்குளத்தில் உள்ள பிள்ளைமார் தெருவில் யாசகம் பெற்று பூஜை செய்து வந்தார். அப்போது பெரிய பிள்ளை என்ற பண்ணையாருக்கு ஏகப்பட்ட நில புலன்கள் இருந்தன. இறைவனின் சிந்தை அவரிடம் கொஞ்சம் இடம் கேட்க விரும்பியது. மேலும் சித்தரும் வயோதிகராகி விட்டார். இனியும் அவரை சோதிக்கக் கூடாது, இனி இந்தப் பகுதியில் தங்கிவிடவேண்டும் என்று எண்ணினார். ஆகவே பெரிய பிள்ளைக்கு இராஜ பிளவை என்ற கொடிய நோயை உருவாக்கினார். அந்த நோயால் பெரிய பிள்ளை மிகவும் துன்பப்பட்டார். பல வைத்தியர்கள் முயன்றும் குணப்படுத்த முடியவில்லை.

 

ஒருநாள் இறைவன் பெரிய பிள்ளையின் கனவில் தோன்றினார். அப்பனே! உன் நோயை நான் குணப்படுத்துகிறேன். நீ எனக்கு என்ன தருவாய் என்று கேட்டார். அதற்கு பெரிய பிள்ளை, "ஆண்டவனே! இந்த கொடிய நோயைக் குணப்படுத்துங்கள் ஐயா, நீங்கள் என்ன கேட்டாலும் தருகிறேன்" என்று கைகூப்பித் தொழுதார்.

என் பக்தன், சித்தர், நெக்கட்டை மரத்தடியில் இருக்கிறான். அவனை அழைத்து வந்து நோய் புண்ணைக் காட்டு அவன் எளிய மருந்து தான் தருவான். அதை பயன்படுத்து உன் நோய் குணமாகும். நீ எனக்கு உன் இடத்தில் எட்டில் ஒரு பங்கு நிலம் தர வேண்டும். அது நான் கோவில் கொள்ளுமிடத்தையும் அதனைச் சுற்றியும் அமைய வேண்டும் என்று கூறி மறைந்தார்.

 

மறுநாள் காலை சித்தருக்கு ஆளனுப்பி அழைத்து வந்தார்கள். சித்தர் முதுகில் உள்ள இராஜபிளவைப் பார்த்தார் (அந்த காலத்தில் இராஜபிளவை நோய் வந்து யாரும் பிழைத்தது இல்லை). சித்தர் இறைவனைத் துதித்து, மந்திரமாவது நீறு என்ற பொய்யா மொழிக்கிணங்க திருநீறை மந்திரித்து தடவ, ஆச்சரியப்படத்தக்க வகையில் நோய் விரைவில் குணமாகியது. உடனே பெரிய பிள்ளையும், எம்பெருமானுக்கு வாக்களித்தபடியே எட்டில் ஒரு பங்கு நிலத்தை அளித்தார்.

 

சிறிது காலம் தெப்பகுளம் அருகேயுள்ள கருவன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்து வந்தனர். அதன்பின் தற்போது கோவில் கொண்டருளிய இடத்தை சித்தர் பார்த்தார். அம்மன் கோவிலும், அபிஷேக கிணறும், ஆலமரமும் கூடிய இந்த இடமே இறைவன் கோவில் கொள்ள சிறந்த இடமெனக் கருதி அங்கே எம் பெருமானை எழுந்தருளச் செய்தார். அன்று முதல் அந்த இடம் ஆலடிப்பட்டி என்று பெயர் பெற்றது.

அங்கேயே கோவிலை நிறுவி பூஜை செய்து வந்தார். காலம் செல்லச் செல்ல சித்தரும் வயதாகிவிடவே தனது சொக்காரர்களை அழைத்து வந்து அவர்களைப் பூஜையில் ஈடுபடுத்தினார்.

 

இத்தனைக் காலம் தொண்டு செய்த சித்தரைப் பெருமைப்படுத்த விரும்பிய எம்பெருமான் சித்தருக்கு தனது இடப்புறத்தில் பள்ளிகொள்ள (சமாதியடைய) இடம் கொடுத்தருளினார். எனவே சித்தரின் பொன்னுடல் கோவிலுக்குள்ளே அடக்கம் செய்யப்பட்டது. இறைவன் ஆணைப்படி சித்தருக்கு சிலை ஒன்று அமைக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

தலைவலி மற்றும் தலை நோய்கள் எது வந்தாலும் கர்ப்பசித்தருக்கு  நேர்த்திக்கடன் செய்தால், தலை நோய் சூரியனைக் கண்ட பனிபோல் போய் விடும். இன்றும் ஆவணி, பங்குனி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் ஏழாம் திருநாளன்று கபால எண்ணெய் சாத்துதல் என்ற வழிபாடு, சித்தருக்கு எண்ணெய் சார்த்தி என்ற சிறப்பான வழிபாடாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் கோடானுகோடி பேர் மருந்தின்றி குணமாகி வருகிறார்கள்.
 

உடல் நோய்க்கும் உள்ள நோய்க்கும் மருந்தாக வைத்தியம் பார்ப்பவனாக அமைந்திருக்கும் எம்பெருமான் வைத்தியலிங்க சுவாமியின் அருளால் வில்வ இலையும், திருநீறும், தீர்த்தமும் பெற்று நோய் குணமாகி வருவோர் கோடிக்கணக்கானோர் இன்றும் அவரை வாழ்த்தி வணங்கி வருகிறார்கள்.

மதுரை, விருதுநகர், திருத்தங்கள், திண்டுக்கல்,சென்னை என பல்வேறு ஊர்களிலும் பக்த்தர்களைக் கொண்டுள்ள அருள்மிகு வைத்தியலிங்கப் பெருமான் அனைவரையும் நோய் நொடியின்றியும், செல்வ செழிப்பானவர்களாகவும் வாழ வைத்து தன் பக்தர்களைக் கொண்டு ஆலடி மாநகரிலிருந்து அருள்பாலித்து வருகிறார்.


ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமியே சரணம்.